Monday, July 9, 2007

'அ'னா 'ஆ'வன்னா..

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.

சாதுவான பையன்களென்றால்
'ஆரிய பவன்.'
சட்டாம்பிள்ளைகளுக்கு
'முனியான்டி விலாஸ்.'

காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும்
சந்தித்துக் கொள்வோம்.

திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற
'சிங்கிள் ஆம்லெட்' என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.

***

கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'
எனக் கேட்டு
நிறம் மங்கிய
பீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசி
உணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.
**
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் - அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.

அந்த விவசாயி
மதிய வெயிலில்
மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
"தண்ணீர் வருமா? " என்று
சோதித்துப் பார்க்கிறார்.

அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.
**நன்றி: நா. முத்துக்குமார்.