Thursday, March 29, 2007

இளங்கலை காதலியல்!

பி.எஸ்சி.. லவ்வாலஜி
**
மழை நேரத்தில் தோன்றும்
ஒரு சின்ன மின்னலின் நீளமே
ஆறு கிலோ மீட்டர் இருக்குமாம்..
வெப்பமோ 1200 டிகிரி சி’
அப்பப்பா...
உன் வம்சத்தில்
எல்லாமே சூப்பர் பவர்தானோ!
**
ஐந்து லட்சம் கிலோ மீட்டர்
தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தில்
எழுபத்தைந்து சதவீதம் ஹைட்ரஜன்
என்று துல்லியமாகக் கண்டறிய
இருக்கிறது விஞ்ஞானம்
பக்கத்து வீட்டிலிருக்கும்
உன் இதயத்தில்
நான் இருக்கிறேனா இல்லையா
என்பதைக் கண்டறியத்தான்
ஒரு விஞ்ஞானமும் இல்லை!
**
மீன் கொத்திப் பறவைகள்
தாம் சாப்பிட்ட மீன்களின்
முட்களைக்கொண்டே
கூடு கட்டிக்கொள்கின்றன.
மனங் கொத்திப் பறவை நீயோ
என் இதயத்தில் கூடு கட்டி குடியேறி
பிறகு என் இதயத்தையே சாப்பிடுகிறாய்!
**
தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன.
ஆனால், இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில்தான்!
**
சிங்கத்தை ஒட்டகம்
உதைத்தே கொன்றுவிடுமாம்.
நீ என்னைப் பார்வையாலே
கொன்றுவிடுகிறாய்!
**
நத்தை அதன் கொம்பில்
கண்களை வைத்திருக்கிறது
நீயோ உன் கண்களில்
அம்புகளை வைத்திருக்கிறாய்!
**
நாட்கள் எல்லாம் அழுகின்றன
அவள் பிறந்தநாளாய் பிறக்காததற்காக
**
இந்தியாவில்
ஆளுநர் ஆவதற்கு
35 வயதுக்கு மேல்
இருக்க வேண்டும்.
ஆனால் நீயோ
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே!
**
மின்மினிப் பூச்சிகளில்
அதிகம் ஒளி வீசுவது
பெண் மின்மினிகள்தான்.
அது சரிதான் என்பது
உன் கண்மணிப் பூச்சிகளைப்
பார்த்தாலே தெரிகிறதே!
**
தங்கம் எப்போதும்
தனியாகக் கிடைக்காதாம்.
ஆனால் உன் தாய்
தனியாகத்தானே பெற்றெடுத்தார்
உன்னை!
**
நிலவில் வாயு மண்டலம் இல்லை.
அதனால் அங்கே ஒருபோதும்
மனிதன் பேசினால் கேட்காது.
அதனால்தான் நான் பேசுவதை
எப்போதும் கேட்பதில்லையா நீ?
**
எரிமலை இருந்த, இருக்கும்
இடத்தில்தான் கிடைக்குமாம்
கந்தகம்.
நீ இருக்கும் இடத்தில்தான்
எனக்குக் கிடைக்கின்றன
கவிதைகள்!
**
‘காலியம்’ என்கிற உலோகம்

நம் உள்ளங்கைச் சூட்டிலேயே
உருகி விடுமாம்!
நானோ
உன் நிழலின் சூட்டிலேயே!
**
ஒரு கையால் ஓவியம் வரைந்துகொண்டே
இன்னொரு கையால் எழுதும் பழக்கம்
உடையவர் ஓவியர் லியனார்டோ டாவின்ஸி!
ஒரு கையால் எழுதிக்கொண்டே
இன்னொரு கையால்
தன் கூந்தலையே கோதிக்கொள்ளும்
ஓவியம் நீ!
**
இந்தியாவின்
‘ரோஜா தலை நகரம்’
பூனா.
என்றாலும்
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்!
**
இங்கிலாந்து நாட்டில் வாழும்
அனைத்து
கறுப்பு அன்னப் பறவைகளும்
இங்கிலாந்து அரசிக்குச் சொந்தமாம்.
இந்தியாவில் வாழும்
அனைத்து
வண்ணத்துப் பூச்சிகளும்
உனக்குச்சொந்தமோ?!
**
என்னைத் தவிரயாரிடமும் பேசாதே!

உன் இதழ்களில் நனைந்து வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாக்விடுகின்றன.
**
நன்றி..தபூ சங்கர்

1 comments:

Anonymous said...

அழகு