என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.
*
காதல்
கொடுப்பதன்று.
எடுப்பதன்று.
ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.
மடக்குதல் அன்று.
மடங்குதல் அன்று.
எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.
இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.
தேடல்கள்…
தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து…
உள்திரும்பித் திருப்தியுறுவது.
இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.
அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.
*
நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது.
பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது.
காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?
அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா?
ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும்
பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக…
எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.
*
அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது…
உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது.
கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!
வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?
*
இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன…
அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…
உடல்களால் இணையாவிட்டால் என்ன…
உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று.
பொய்!
*
அது உடல் கடந்து நடப்பதா?
உடல்களால் நடப்பது.
சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம்.
காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.
*
ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள்.
அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.
*
வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும்.
பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.
அதனால்தான்…
அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது.
*
அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…
நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!
இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்…
காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்!
காதலிகளைச் சந்தித்திருக்கலாம்.
காதலன்களைச் சந்தித்திருக்கலாம்.
காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!
*
சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது.
காதலைப் போல ஒன்று எழலாம்.
அதுவே காதல் ஆகாது.
காதலென்பது என்ன…
இழந்துவிட்டு வருந்துவதா?
பிரிந்துகொண்டு அழுவதா?
இல்லை…இல்லை..
*
'காதல்… காதல்… காதல்…
காதல் போயின்
சாதல்… சாதல்… சாதல்…'
சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது?
அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது.
ஆனாலும் சொல்கிறேன்…
அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது.
அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது.
அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது.
அவனது போராட்ட உணர்வுக்குள்
ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள்
என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!
*
என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை.
*
மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்…
பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்..
எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?
*
ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்…
திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…
கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும்
காதல்
என்று நம்பச் சொல்கிறீர்கள்?
*
காதலின் எல்லை
திருமணம் இல்லை
என்பதை
உணர்ந்து கொள்ளவும்
உரத்துச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குத்
தெம்பு இருக்கிறது?
*
தம் காதலை வெற்றி கொள்ளவும்
தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?
அதற்குக் காரணம் அவர்களல்ல;
நீங்களுமல்ல.
நானுமல்ல.
*
குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை.
நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.
*
காதல் குற்றமா?
சமூக குற்றமா?
நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும்
அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு
கடித்துக் குதறச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான்.
சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு…
வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!
*
நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள்.
காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள்.
அது இருவரின் முழுமையடைதல் இல்லை.
முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.
*
இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்…
பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…
அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம்.
அந்தப் பெண்மீது அவளது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…
அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கள் மட்டுமல்ல…
அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…
செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம்.
*
காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.
*
மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள்
கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?
*
வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது.
ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.
காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம்.
உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம்.
அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.
எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை.
உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக…
ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக…
அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…
ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக…
இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை.
*
பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது.
பேசியிருக்கீர்களா நீங்கள்?
நான் பேசியிருக்கிறேன்.
ஆணாக இருந்தல்ல.
பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன்.
என்ன சிரிக்கிறீர்கள்?
பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!
*
பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை.
ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.
இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!
*
அழகியக் கூண்டு செய்து…
அதற்குள் அடக்கி வைத்து…
'இது என் பறவை..
இது எனக்கு…
எனக்கு மட்டுமே'
என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும்.
விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.
*
உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல்.
தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே!
தருவதற்கு ஆண் யார்?
தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!
முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல்.
எந்தச் சிறைக்குள்ளும் …
எந்த விலங்குக்குள்ளும்…
அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.
*
என்னைச் செதுக்கியது பெண்மை.
என்னில் சிற்பமானது காதல்.
எனக்குள் எல்லாமும் அதுதான்.
எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!
*
பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க…
கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…
அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க…
பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ...
இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய…
போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க…
அதுதான்…
ஆம் …
அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.
*
காதல் கற்றுத் தரும்.
காதல் எல்லாம் தரும்.
காதலியுங்கள்.
புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம்.
உணர்ந்து கொள்வதை?
*
அணுஅணுவாய்
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.
*
பின்குறிப்பு:
பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம்
**நன்றி:அறிவுமதி..
Friday, April 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment