Thursday, April 26, 2007

என்னைத் தெரியுமா?

கைவிளக்கில்
விழுந்த நிழல்
விதிமழையில்
கலைந்த
ஓவியம்
என்னைத்
தெரியுமா ?

இரவினுள்ளே
ஒளிந்த இருட்டு
இல்லை
என்னும் சொல்லினுள்
இல்லாத அர்த்தம்
என்னைத்
தெரியுமா ?

தேவைகளைத் தேடிய
தேவையற்ற பயணம்
துயரத்தின் கண்களில்
துளிர்விடும் கண்ணீர்
என்னைத்
தெரியுமா ?

வேதனைகளில்
வீசும் வாசம்
சோதனைகளின்
சுவாசக் காற்று
என்னைத்
தெரியுமா ?

சூறாவளியின்
பிறப்பிடம்
வெள்ளக்காட்டின்
இருப்பிடம்
என்னைத்
தெரியுமா ?

ஓடும் நதியினில்
விழுந்த சருகு
கடலலையில்
அமர்ந்த மழைத்துளி
என்னைத்
தெரியுமா?

என்னைத் தேடியே
என்னைத் தொலைத்தவன்
எண்ணக் கவிதைகளில்
என்றும் வாழ்பவன்
என்னைத் தெரியுமா ?
** நன்றி: maraththadi.com

0 comments: