Friday, April 13, 2007

காதல் மாய உலகம்!!

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

வரம்கொடுக்கும் தேவதைகள்
உலாவரும் காடு,
காதலெனும் மாய உலகம்.

அங்குள்ள குரங்குகளும்
அழகானவை.
சிறகுமுளைத்த
சிறுவர்களின் கூட்டமொன்று
எப்போதும் இசையெழுப்பிக்
கொண்டிருக்கும்.

அங்கே,பெண்மயில்கள்
தோகை விரிக்கும்
கவிஞர்கள் வாயடைக்கக்
கற்கள் கவிபாடும்

வானங்கள்
பூமியில் இயங்கும்
நட்சத்திரங்களைப்
பறிக்க இயலும்.

மான்கள் வேட்டையாட
ஆண்கள் மாட்டிக்கொள்வர்.

புத்தகங்களுக்குள்
இறகிருக்காது
பறவையே இருக்கும்.

ஓடுமீன் எல்லாமே
உறுமீன்கள் இங்கே.

நிலவுகள் தேய்வதில்லை!
ஆம்,
காதல் தேசத்தில்
பல்லாயிரம் நிலவுகள்.

வருடங்கள் இல்லை
வயதும் இல்லை.

பால்யவயதுப்
படுக்கை நேரக் கதைகளைப்
பாடமென
நம்பச் செய்யும்
காதல்.

செருப்பில்லாமலே
சிண்ரெல்லாக்களை
கண்டுகொள்ளலாம் அங்கே.
அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்.

கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி.
உதடுகள் ஓய்வெடுக்க
இதயங்கள்
பேசிக்கொள்ளும்.

இங்கே மரங்கள் பூக்கின்றன,
காய்ப்பதில்லை
பசிக்குத்தானே பழங்கள் தேவை.
தேனை ஊற்றி வளர்க்கிறார்கள்
சொலைகளை.
அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.

முடிவில்லாப் பாதைகளும்
சப்தமில்லா அருவிகளும்
அன்னியரில்லாப் பூங்காக்களும்
அழகானப் பேய்களும்,
அலையில்லாக் கடல்களும்
பேச்சில்லா பாஷைகளும்
இருளில்லா இரவுகளும்
விடியாத நாட்களும்
வேண்டும்போது மழையும்
வேண்டாமலே வரமும்
எப்போதும் தென்றலும்
எத்திக்கும் இன்பமும்
நிறைந்திருக்கும்
காதல்
மாய உலகம்...
**நன்றி: நா. முத்துக்குமார்

0 comments: