இட்லிப்புத்திரர்கள்
இட்லிகள்
மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி!
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு.
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவைகுட்டிப்
போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.
**
வெட்கம்
உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின்
கேள்விக்குத்
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம்
என்று பெயர்
**
தூர்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்.
ஆழ்நீருக்குள் அப்பா
முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்..
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்.
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர்
சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க..
**
நட்சத்திரங்களைப் பற்றி
மூன்று விஷயங்கள்
தெரியும் எனக்கு
ஒன்று...
சூரியன் இல்லாத
இரவுக்கு
நட்சத்திரம் தான்
ராஜா
இரண்டு...
நட்சத்திரங்களின்
தகதகப்பு
போலியானது
உண்மையில் அவை
ஒளி உமிழிகள் மட்டுமல்ல
ஒளி வாங்கிகளும் கூட
மூன்று...
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
சொந்தமாய் உண்டு
அதிகம் அதிகமான
இருண்ட பள்ளங்கள்"
**
Wednesday, April 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அமரக்கவியின்அருமையான வரிகள்!
முனைந்தெடுத்து
இரை மீட்டியமைக்கு
நன்றி!!!
Post a Comment