Monday, April 9, 2007

காதல் ஆத்திச்சூடி...

அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள்.
அது அவர்கள் நட்பின் கடமை.
உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு.
குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு.
எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

இதயத்தை அலங்கரி!
ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்!
ஆகவே இதயத்தை அலங்கரி.இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.
அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை.
அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்...
அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

ஈர்க்கும் படி நட!
இது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.
ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம். முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

உறுத்தாமல் பார்!
காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும்.
உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.
இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!

ஊதியமின்றிக் காவல் செய்!
உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.
நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய்.
அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள்.
அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

எதற்கும் வழியாதே!
தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.
செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.
அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே.
''இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.
அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

ஏகலைவனாய் இரு!
நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம்.
எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!

ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.கண்களில் அவள் உருவத்தை வைகாதுகளில் அவள் குரலை வைசுவாசத்தில் அவள் வாசம் வை உதடுகளில் அவள் பெயரை வைஉணர்வில் அவள் உயிரை வை!

ஒரு நாள் காதலைச் சொல்!
அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.'
உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள். 'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்...'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள்.
பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

ஓர் உலகம் செய்!
அந்த உலகம் அற்புதமானது.அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒளவியும் ஒளவாமலும் பழகு!
இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்! காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!
** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..

2 comments:

Anonymous said...

suuupper

Anonymous said...

suuupper