Tuesday, April 17, 2007

நியூட்டனின் மூன்றாம் விதி!

கிராமந்தோறும் விஞ்ஞானம்
அட்டைக் கத்திகள் பளபளக்க
ஆழிசூழ் உலகை ஆண்டு;
பம்ப்செட் மறைவில்
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு;
ஊர்போய்ச் சேரும்
ஒரு நாள் ராஜாக்கள்
இப்போது வருவதில்லை.

கட்டியக்காரனுக்கு
பொட்டலம் கட்டி
மாலை போடுவதற்காக
தவளைகள் தேடும் பிள்ளைகள்
தறிக்குழியில் கிடக்கிறார்கள்.

பெண் வேடமிடும் நடிகர்களின்
கொட்டாங்குச்சி மார்பில்
ஊர் பெயர் பராக்கிரமம் சொல்லி
பணத்தாள்கள் குத்தும்
பெரிய வீட்டு பிள்ளைகள்;
டூரிஸ்ட் பஸ்ஸில் வந்திறங்கி
பெருமாள் கோயில் படித்துறையில்
மொட்டைத் தலையுடன்
லஜ்ஜையின்றி குளிக்கும்
தெலுங்குக்காரிகளின்
குறுமுலை பார்க்க
பழகிக் கொண்டுவிட்டார்கள்.

தெருக்கூத்து முடிந்த மைதானமும்
வர்ணங்கள் சிதறிக்கிடக்கும்
ஒப்பனை அறை அதிசயங்களும்
குழந்தைகள் கைக்கெட்டாத
காலத்தில் உறைந்துவிட்டன.

மூங்கில் பத்தைகளின்
சீரியல் லைட்டுகளில்
எங்கள் ஊர் அம்மன்
உருவமாற்றம் அடைந்துவிட்ட
இந்த வருடத் திருவிழாவிற்கு
வீடியோவில்
'படையப்பா' படமாம்!

**நன்றி: நா. முத்துக்குமார்

0 comments: