Tuesday, May 5, 2009

பழநிபாரதி - கவிதைத்திருவிழா!

நீ இல்லாத போது...

உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!

*
நீ பொரி போட்டுப்
பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!

*
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.

***** ***** ***** *****

யாருக்கும் தெரியாதவள்!

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்!

உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்!

புகைந்து கொண்டிருந்தது
சிகரெட் துண்டு!

கிழிந்து கிடந்தது
ரவிக்கை!

காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்!

கடை வீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்து போனார்கள்
நிறையப் பெண்கள்

எந்த பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி.

***** ***** ***** *****

பெயர் தெரியாத கணம் !

பார்க்கக் கிடைத்த
கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!

பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது

எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை

நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்

***** ***** ***** *****

சாம்பல் பொழுது!

ஊனமான
கோபுரத்தின் இடுக்குகளில்
உற்றுப் பார்க்கின்றன
நசுங்கிய புறாக்கண்கள்!

எங்கும் எதற்கும்
கதவுகள் இல்லை!

யாரும் ஓடித் தப்பிக்க
இயலாமல்
வளர்கிறது
அத்துவானப் பொட்டல்!

மனநோயாளிகளின்
சிரிப்பும் திகைப்பும்
காற்றையும் நெருப்பையும்
தொற்றி
எரிகிறது
வன்முறையிலிருந்து வன்முறை!

எது
எதனுடையதெனத் தெரியாமல்
பாதைகளை மூடுகிறது
சாம்பல்!

***** ***** ***** *****

பொங்கலோ பொங்கல்!

சம்பா செத்த வயலில்
அடர்ந்து கொட்டும் பனியில்
சில்லிடுகிறது நிலம்!

சுழன்று எரியும்
போகியின் நெருப்பில்
உழவர்கள்
கருகும் நாற்றம்!

பிழிந்த கரும்பின்
கழிவுகளில்
எறும்பின் கால்களால்
ஊர்ந்து வருகிறது
தை
பசியில் குழிந்து
எலி வளைகளாகின்றன
விவசாயக் கண்கள்!

அடிமாடுகள் சுமந்து
விரையும் வாகனத்தின்
அடியில் அதிர்கிறது
வயல்களைக் கிழிக்கும் சாலை!

உடைந்து கிடக்கும்
மண்பானையில்
அள்ள முடியாமல்
சிதறிக் கிடக்கின்றான்
என்
சொல்லாரிசிகள்!

***** ***** ***** *****

பூஜையறை!

பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்

ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்

கடவுள் ஏன் கல்லனான்
கேட்டான் கண்ணதாசன்
கடவுள் ஏன் ப்ளாஸ்டிக்கானான்
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி

******

பத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை

**நன்றி: பழநிபாரதி

0 comments: