Wednesday, May 30, 2007

கால ராட்சசன்!

யுகம்
அவன் நகம்!
உள்மூச்சு
ஜனனம்!
வெளிமூச்சு
மரணம்!

நட்சத்திரங்கள்
அவன் துடைத்தெறிந்த
தூசுத்துகள்கள்!

சந்திர சூரியர்கள்
அவன் காலிடை
மிதிபடுகல்லிடைக்
கிளர்ந்த சிறுபொறிகள்!

வியர்வைத் தாரையின்
ஒரு துளி கடல்!
அதில் விளைந்த
கிருமிகள்,
ஜீவராசிகள்!

மழிக்கையில் உதிர்ந்த
மருக்கள் மலைகள்!
கட்டைவிரல்
நகம் இடறச்
சிதறிப்போன சிற்றில்கள்,
சாம்ராஜ்ஜியங்கள்!

போர்கள்
தெருக்கூத்து!
கொட்டாவி
பூகம்பம்!
பெருமூச்சு
புயல்!

மனிதர்கள்!
மைக்ரோ வினாடிகளில்
அவன்
படைத்துப் படைத்து
உடைக்கும் குமிழ்கள்!

பூகோளம்
சரித்திரம்!
தத்துவம்
இலக்கியம்!
கலை கலாசாரமெல்லாம்
அரைகுறையாய் எழுதி
அவன்
எச்சில் துப்பியழிக்கும்
சிலேட்டுச் சித்திரங்கள்!

விஞ்ஞானம்
அவன் ஒழுகவிட்ட
ஒரு சொட்டறிவு!
பூமியாகப்பட்டது
அவன் கணக்கில்
சில நாட்கள்
பறக்கவிட்ட பலூன்!

இஃதிவ்வாறிருக்க -காலத்தை
வென்றதுகள் என்று
தருக்கிச்
சிலதுகள் திரியுதுகள்
சிகையலங்காரப் பொழுதிலவன்
தலையினிழிந்த மயிரனையதுகள்.


(மயிரனையது-மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார். )
**நன்றி:வைரமுத்து, கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

0 comments: