Friday, June 1, 2007

குழந்தைகள் நிறைந்த வீடு..

கருப்பு வெள்ளை புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்.
*

அடகு வைத்த
கடிகாரத்தை
அடிக்கடி

நினைவுப்படுத்தும்..
மணிக்கட்டில் தழும்பு

*
இறந்த பாட்டியின்
மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

*
தோட்டத்தையும்

பின்பொரு பெண்ணையும்
சேர்த்து ஜாபகப்படுத்துகிறது
நூலகப் புத்தகத்தில்

உலர்ந்த செம்பருத்தி.
*
யாரும் தீண்டாமல்
நகரும் தீப்பெட்டி
உள்ளே பொன்வண்டு.
*
எழுந்து நடந்தான் புத்தன்
போதிமரத்தடியிலும்
எறும்புகள் கடிக்கின்றன.
*

இன்று வேண்டாம் நிலா
நாளை வா
ஊட்டுவதற்குச் சோறில்லை.
*
யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்.
*
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை.
*

உடம்பெல்லாம்
வளையல்கள்
தென்னை மரம்.
*

சிக்னலுக்குக் காத்திருக்கும்
கூட்ஸ் ரயிலுக்குக் கீழே
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.

*
நாள் தோறும்
இரண்டு முறை
சரியான நேரம் காட்டும்
ஓடாத கடிகாரம்.
*

கிராமத்து நாவிதன் முன்
வரிசையாய் பங்காளிகள்
தாத்தாவுக்குக் காரியம்
**நன்றி: நா. முத்துக்குமார்

0 comments: