Wednesday, March 28, 2007

கிறுக்கல்கள்..

கண்களுக்குள் கண்ணீர்!!!
கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே'
அன்னை' ஆனவளே! - உன்
முக வரிகளில்
மனித நேயத்தின் முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்சிஜனாக சுவாசிப்போம்!
**
தோஷம்: சர்ப்ப தோஷம்
பரிகாரம்:
வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால்
ஊற்றி, முட்டை வைக்க வேண்டும்.
என் பிரகாரம்:
தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.

தோஷம்: செவ்வாய் தோஷம்
பரிகாரம்:
வாழை மரத்தை வெட்டி விட்டு,
பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டும்.
என் பிரகாரம்:
வாழை மரத்தை விட்டு விட்டு,
வசதி இல்லாத பெண்ணுக்கு
மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

தோஷம்: புத்திர தோஷம்
பரிகாரம்:
அரசமரத்தை சுற்றி விட்டு,
குழந்தை உருவ பொம்மை செய்து,
தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.
என் பிரகாரம்:
யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட
குழந்தையை எடுத்து வந்து,
நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்:
ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு,
அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்:
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு,
மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.

தோஷம்: பாத சனிக்கு
பரிகாரம்:
திருநள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.
என் பிரகாரம்:
வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.

தோஷம்: ஆயுள் தோஷம்
பரிகாரம்:
பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்:
ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை
இருக்கும் வரை சிரிக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம்
செய்ய வேண்டும்.

கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள்
அப்படியே இருக்கட்டும். வாசலில்
கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது
இல்லாமல் செய்ய வேண்டும்.
இது தேஷதோஷம் தீர
ஒரு பரிகாரம்.

நன்றி: ரா.பார்த்திபன்

0 comments: