Thursday, March 29, 2007

நட்புக்காலம்...

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை
**
நீ என்னிடம்

பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
**
உன்னுடன்

சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..
**
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை!
**
பேருந்து நிறுத்தத்திற்குச்

சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..
**
அந்தப் பந்தியில் நான்

மேற்பார்வை
செய்து கொண்டிருக்கையில்
உனது
இலையிலிருந்து
காற்றில் பறந்துவந்து விழுந்து
உடைந்ததே
அந்த
அப்பளத்திற்குத்தான்
முதலில் நாம்
நன்றி சொல்ல
வேண்டும்
**
எனக்குத் தெரியும்

நீ
சாப்பிடும் நேரத்தின்
கடைசி குவளை
தண்­ணீரில்
இருக்கிறேன் நான்..
**
போகிற இடத்தில்

என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை!
***
எல்லாவற்றிலும்

எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்!!
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது!!
**நன்றி:அறிவுமதி

0 comments: