Wednesday, March 28, 2007

ஒற்றைப் பார்வையால் அழகாகிறேனடா..

எல்லாப் பெண்களுமே
நிற்கும் காரை கடக்கையில்
அதன் கண்ணாடியில்
தங்களைச் சரி செய்து கொள்கிறார்கள்.
நானோ உன்னைக் கடக்கையில்
உன் முகத்தைப் பார்த்தே
சரி செய்து கொள்கிறேன்.
***

உனக்கேன்
இந்த மாதிரி ஆசையெல்லாம்...
என் வளையலை உடைப்பது,
கொலுசுத் திருகாணியைக்
கழற்றி விடுவது
கூந்தலில் இருக்கும்
பூவைப்பறித்து
உன் கன்னத்தில்
உரசிக்கொள்வது
காதில் தொங்கும்
ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது!

ஆனால் ஒன்று
சின்ன வயதிலிருந்து
இந்தத் தோடு,
வளையல்,பூ,கொலுசு
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டுமென்று
யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த
மாதிரியிருக்கிறதெனக்கு!
சின்ன வயதில்
சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன்
ஆனால் அப்போது
வெட்கப்படுவதில்
வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை!
வேறு ஏதாவது
இருக்கும் என்பது
கூட அப்போதெனக்குத்
தெரிந்ததில்லை!
இன்று
மாலை பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ
என் கையை பிடித்து விட்டபோது
உன் கைக்குள் இருக்கும்
என் கையை இழுக்கத் துடிக்கும்
என் பெண்மையிலும்
"வேண்டாம் இருக்கட்டும்"
என்ற காதலிலும்
மாறி மாறித் தவித்த தவிப்பில்......
அப்பா...
வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது!!
***
எதற்கெடுத்தாலும் வெட்கப்படுகிறாயே
என்று என்னைக் கேலி செய்யாதே.
இந்த உலகில்
உன்னைத் தவிர
வேறு யாராலும்
என்னை வெட்கப்படுத்த
முடியாது.
***
கட்டிக்கப் போறவனை
"டேய்"
என்று கூப்பிடலாமா என்று
அதட்டுகிறாள் என் அம்மா.
கட்டிக்கப் போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே
"டேய்"!
***
உன் காதலியாய் இருப்பது
எனக்குப் பிடிக்கவே இல்லை.
கால்பந்து ஆடிவிட்டு நீ
களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில்
போட்டுக்கொள்ளத்
துடிக்கும் என் ஆசையை
உன் காதலியாய் என்னால்
நிறைவேற்ற முடியவில்லையே.
அதனால்தான் சொல்கிறேன்
உடனே என்னை
மனைவியாக்கிக் கொள்..
*************
யமுனைதான் எனக்குப்
புண்ணிய நதி
அதுதான் காதல் வாழும்
தாஜ்மஹாலை
தொட்டுக்கொண்டு ஓடுகிறது.
***
என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை
விடவும்
உன் ஒற்றைப் பார்வை
என்னை அழகாக்கி விடுகிறது.
***

"நீ இல்லாமல்
என்னால் உயிர் வாழ முடியாது"
என்று நீ சொல்வதை நம்பமாட்டேன்.
நீ பிறந்து
மூன்று வருடங்கள்
கழித்துதானே நான் பிறந்தேன்.
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ
உயிர் வாழ்ந்திருக்கிறாய்
***
நன்றி..தபூ சங்கர்

0 comments: