Tuesday, April 10, 2007

பெய்யெனப் பெய்யும் மழை!

ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
**
வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு

உள்ளொளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு

ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
**
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
**
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
**
'என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க
உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
**
போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது'
என்றாய்
ச்சே...ச்சே..
உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது
பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா
இருக்கின்றன.
**
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை' என்று.
**
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்
**
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்...நின்றுவிட்டது காற்று.
**
என்னில் இருந்து

உன்னையும்
உன் நினைவுகளையும்
வேரோடுப் பிடுங்கி
எறிந்து விட்டதாய்
நினைத்து
உன்னைப் பார்த்தேன்
உன் பார்வையால்
உன்னை மீண்டும்
எனக்குள்
விதைத்து விட்டு
மழைக்கால மின்னல் போல்
புன்னகைத்தாய்...
**
ம்ம் குடை எதற்கு?
என் தாவணி போதும்
நம் இருவருக்கு
மழைக்குக் குடை
விரிக்கப் போன
என் மீது கோபப்பட்டாய்...
**
சில புயல்கள்
கரையைக் கடப்பதில்லை
தெரியுமா உனக்கு?

அப்படியா?

அகல விரிந்த
உன் விழிகள்
பார்த்து சொன்னேன்..
என் இதயத்தில்
மையம் கொண்டிருக்கும்
நீயும் ஒரு புயல் தானே..
**
மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்
**
ஒரு வார்த்தைச்
சொல்லிட்டுப் போ

போதுமா!!!

என் உதடுகளில்
ஒரு வாக்கியமே
எழுதிவிட்டு
கேலியாய் கேட்டாய்
என்னிடம்..
**
மழைக் காலப் பரிசா
ஏதாவது கொடுக்கச்
சொல்லிக் கேட்டாய்...

கவிதை வேண்டுமா
என்றேன்...

ம்ம்ம் சரி என்றாய்..

மழலைகளை விட
சிறந்தக் கவிதை
வேறு உண்டோ
என்றேன்...

நீயோ
ச்சீ போடா
என்றாய்...
**
காலம்

உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது
நீ எனக்குக்
காதலை
அறிமுகம் செய்தாய்....
**
கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...
**
எனக்காக இல்லை...
என்று தெரிந்தும்
எடுத்து பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்...
நீ பாதையோரமாய்
வீசிச் செல்லும்
உன் பார்வைகளை..
**
வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி
பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...
**
உன் கோபம்
எனக்குப் பிடிக்கிறது
அதன் இலக்கு
நானாக இருப்பதினால்...
**
சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்...
**
ஒதுங்கிச் சென்றாலும்
அடிக்கடிச் சந்தித்து
சித்ரவதைச் செய்கினறன
உன் பார்வைகள்
**
பார்வைகளால்
பேசியது போதும்
இதழ்களால்
ஓரிரண்டு
வார்த்தைகள்
எழுதக் கூடாதா?
**
ம்ம்ம்
என் நிழலுக்கு
கிடைத்தப் பாக்கியம்
எனக்கு இல்லை
உன் நிழலைத்
தழுவிய படி
என் நிழல்
**
எதையாவது கேள்
எதையாவது சொல்...
-
நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி
**
மழைப் பிடிக்குமா?

என கேட்டேன்
மழையில்
முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை
தலையில்
கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்
**
சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...
**
என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?

ம்ம்ம்...
அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..

செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..
**
சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ..
நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி
கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...
**
நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?

ம்ம்
எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..

ம்ம்ம்..
அது இல்ல
உடையைச் சொல்லுங்க
என்கிறாய்..

அட
கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல

போய்யான்னு
சொல்லிட்டு
போனை
வைத்துவிடுகிறாய்..
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

0 comments: