Wednesday, April 11, 2007

கொலுசுகள் பேசக்கூடும்!!

அவன் பார்வையில்..

எதையேனும்
யாரையேனும்
எப்போதும்
காதலிப்பதில்தான்
உயிர்ப்பின்
இரகசியம் ஒளிந்திருக்கிறது
**
நம் கண்கள் சந்தித்துக்கொண்டபோதல்ல
மனங்கள் ஒன்றுபட்டபோதல்ல
உடல்கள் சங்கமித்தபோதல்ல
நினைவற்ற தூக்கத்திலும்
பிடிவாதமாக என் கைகளைச்
சிறைப்பிடித்துக் கொண்டிருந்த
உன் உள்ளாங்கைச் சூட்டில்
அதிகம் உணர்ந்தேன்
காதலை..
**
முதலில் எனக்கு புரியவில்லை..
நீ "வேண்டாம்.. வேண்டாம்" என்று
தடுத்தபோதும்
அது உனக்குப் பிடித்திருக்கிறது
என்றுதான் நினைத்தேன்..
ஆனால்
நீ அழ ஆரம்பித்தபோதுதான்
சற்று ஆடிப் போய்விட்டேன்..
கொஞ்சம் தள்ளி நின்று தயங்கி தயங்கி
நான் மன்னிப்புக் கேட்டபோது
உதட்டைத் துடைத்துக் கொண்டே
"அதுக்கில்லை" என்று அழுகையினூடே
நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு
"இதுக்குத்தான்" என்று
உடைந்த வளையல்களைக் காட்டுகிறாய்..
என்னதான் நான்
வாங்கி தந்ததாய் இருந்தாலும்
வளையல் என் முத்தத்தை விட பெரியதா?
**
பெண்களுக்கென்று
பிரத்யேகமாக
வாசனைகள் உண்டென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்!
குறுகலான மாடிப்படிகளின்
எதிரெதிர்த் திசையில்
ஒருவருக்கொருவர்
வழிவிடுவது
போல் வழிமறித்து
உரசிக்கொண்டே கடந்தோமே
அன்றுதான் தெரிந்துகொண்டேன்
வாசனைக்கென்றே
பிரத்யேகமான
பெண்களும்
இருக்கிறார்கள் என்று!
**
உன்னை
அழவைத்துப் பார்ப்பதில்
எனக்கு என்னதான் இன்பமோ
தெரியவில்லை!
வளையல் உடைத்து,
தாவணி கலைத்து,
முகத்துக்கு முன்னால்
புகை ஊதி...
நீ

கண் கலங்கும்
போதெல்லாம்
முன்னர் இருந்த நான்
வேறுபோல
உன்னை அணைத்துக்கொண்டு
மடியில் சாய்த்துக்கொள்ள வேண்டும் போல ஆகிவிடுகிறேன்.


நீயும் முன்னிருந்தவன்
இவனில்லை என்பது
போல்
உடனே அணைப்புக்குள்ளாகி
மடியில் சுருண்டு கொள்கிறாய்!
ஒரு குழந்தை
போல அழும்
உன்னை சமாதானப்படுத்தும்போது
முன்னிலும் அதிகமாய்
உன்மேல் காதல் வசப்படுகிறேன் நான்!

என்ன நடந்து என்ன?
உன் முதுகு குலுங்குவது
எப்போது சற்றே குறைகிறதோ
அப்போதே
அடுத்து உன்னைச் சீண்ட
என்ன செய்யலாம் என்று
யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது மனம்!
**
ஒரு நவம்பர் மாத மழை இரவில்
நான் தோற்றுவிட்டு அழுதபோது
ஒரு குழந்தையைப் போல வாரிஅணைத்து
'என் கப்பலே' என்று
மடியில் சாய்த்துத் தேற்றினாயே
அப்போதிருந்த அந்த முகம்
இப்போது நினைத்துப் பார்க்கையில்
நீதானா அது என்று
சந்தேகமாகக்கூட இருக்கிறது
தன் சோகங்களைப் புதைத்துக்கொண்டு
அந்த இருட்டிலும்
அவ்வளவு ஒளிவீசிய
அந்த அன்பு முகம்
அதன் பிறகு எவ்வளவோ
நடந்தும் இன்னும் மறக்கவில்லை
ஒரே சமயத்தில்
இவ்வளவாகவும் இருந்து கொண்டு
வேண்டும்போது
தோளில் சுமந்து செல்லும்
தாயாகவும் எப்படித்தான் மாற முடிகிறதோ உன்னால்??!!
**

எல்லோரும் சினிமா பார்க்கையில்
நாம் மட்டும்
அந்தக் காட்சி வந்தபோது
ஒருவரையொருவர்
திரும்பிப் பார்த்துக்கொண்டது
உனக்கு நினைவிருக்கிறதா?
**
முகம் கழுவிய ஈரத்தில்
எனக்கு முத்தமிடப் பிடிக்கும் என்று
வேண்டுமென்றே
டவல் எடுக்காமல்
குளிக்கப் போவாயே
உனக்கு நினைவிருக்கிறதா?
**
நம் இருவரைத் தவிர
இந்த உலகில்
வேறு எவருமே இல்லை
என்பதுபோல்
ஒருவர் மடியில் ஒருவர்
சுருண்டு கொண்டோமே
அந்த வெள்ளிக்கிழமையை
உனக்கு நினைவிருக்கிறதா?
**
ஒரு மழை நாளில்
என் எல்லாத் துணிகளும்
நனைந்துவிட
உன் சேலையை
வேட்டியாக
கட்டிக்கொண்டேனே
உனக்கு நினைவிருக்கிறதா?
**
என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும்
என்று நீ
கேட்டதற்கு நான்
பதில் சொன்ன பிறகு
என்னைக் கடந்து செல்லும்
பொழுதெல்லாம்
பாத்திரம், புத்தகம், கைகள்
என்று எதைக்கொண்டாவது
மறைத்துக்கொண்டாயே
நினைவிருக்கிறதா?
**
‘ நேத்து யெல்லாரும்
ஒறங்குன பொறவு
மச்சில யாரோ
நடமாடுதசத்தம்
கேட்டுது ‘ என்று
அத்தை கூறியதை
ஒன்றுமே தெரியாதது போல்
கேட்டுக்கொண்டிருந்தோமே
நினைவிருக்கிறதா?
**
நீ
பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டுக்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத
மழை நாட்களை
உனக்கு நினைவிருக்கிறதா?
**
நீ
'மணியக்கா வீட்டுக்கு போகணும்"
என்றதும் நான் கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
உனக்கு நினைவிருக்கிறதா?
**
உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த
என்னைப்பார்த்து கண்சிமிட்டி
'எங்கே நீ பண்ணு பார்க்கலாம்"
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?
**
ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
'பார்த்தாயா" என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?
**
ஒரு திருமண வீட்டில்
''அதோ அவர்தான்"
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?
**
என் முகவரியை
நானே எழுதி
உன்னிடம் தந்துவிட்ட
கடிதத்தாள்களை
நினைவிருக்கிறதா?
**
நீ
ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?
**
தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்ன
செய்வதென்று
தெரியாமல்
'தாங்க்ஸ்"
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?
**
'இந்த டிரஸ்
போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னைப் பார்த்துவிடுகிறேன்"
என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே
அந்த
மாம்பழ நிறப்பாவாடையை
நினைவிருக்கிறதா?
**
முத்தம் கேட்டபோதெல்லாம்'
"அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க"
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?
**
ஓரே ஒரு முறை என்று
என் சிகரெட் பிடுங்கி
புகைபிடித்து நீ இருமியபோது
பார்த்துச் சிரித்த
அந்த வழிபோக்கன் முகம்
நினைவிருக்கிறதா?
**
மின்சாரம் போன
போதெல்லாம்
உன் பாட்டியின்
காதில் விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?
**
துணி உலர்த்த
மாடிக்குப்போகும்
போதெல்லாம்'
"ஏண்டி இப்படி ஊருக்கே
கேக்குறமாதிரி கத்தற"
என்று
உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா?
**
''சரியாகச் சொன்னால் முத்தம்"
என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?
**
முதன்முதலில்
நீ
என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?
**
அதே வண்டியில்
''என்ன அவசரம்
சுற்று வழியில்
மெதுவாகப் போ" என்று
தோளில் சாய்ந்து
கொள்வாயே
நினைவிருக்கிறதா?
**
நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
வார பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?
**
உன் - அக்கா கல்யாணத்தில்'
"அடுத்த கல்யாணம்
இவளுக்குத்தானே"
என்று யாரோ சொன்னபோது
ஏனோ என்னைக் கள்ளத்தனமாகப்
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா?
**
இவற்றையெல்லாம்
எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம்
என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?
**
அவள் பார்வையில்..

நீ என்னை
முதன்முறையாக
முத்தமிட்ட
செம்பருத்திச் செடிக்
கரையிலும்
வாங்கித்தந்த கொலுசுகளிலும்
அன்று நடந்ததை நினைவூட்டும்
கசங்கிய சேலையிலும்
நாம் சேர்ந்து சென்ற
இடங்களிலெல்லாம்
வீசிக்கொண்டிருக்கும்
காற்றிலும்
இன்னும் எதிலெல்லாமோ
நீ எனக்குத் தெரிகிறாய்.
ஆனால்
நாம் நேரில்
சந்தித்துக்கொள்ளும்போது மட்டும்
தொலைந்து போகிறாய்.

********
********
என் காதல்

என்னைப் பொறுத்தவரைக்கும்
மிக உயர்வானது
அதைக் குறைவுப்படுத்தும்
உரிமை யாருக்கும் கிடையாது
-என் காதலிக்குக்கூட!''
**
உன்னைக் காதலிக்கிறேன்

என்பதை விடவும்
காதல் வசப்பட்டிருக்கிறேன்
என்ற விசயமே
என்னை
அதிகம் கிளர்ச்சியூட்டுகிறது
**
உன் உதடுகள்

அழுந்த முத்தமிட்டால்
கூட எனக்குக்
காமம் தோன்றாது
கவிதைதான் தோன்றும்!''
**
நமக்குக்

கவிதை வேண்டாம்..
காதல்தான் வேண்டும்!
**
கண்ணுக்குள் ஒளிரும்

பச்சைச் சூரியன் போல
பண்டிகை முடிந்துவிட்டாலும்
காற்றில் மிச்சமிருக்கும்
வெடிகளின் வாசனை போல
விழித்து
வெகுநேரம் ஆகியும்
நேற்று நீ
கனவில் வந்தது
இனிக்கிறது எனக்கு!''
**
இந்த கடிதத்துக்கும் பதிலாக ஏதேனும் பரிசுப் பொருளை அனுப்பிவிடாதே. உன் நினைவுப் பொருள்களைப் பாதுகாக்கும் அளவுகூட உன் நினைவுகளை என்னால் பாதுகாக்க முடியவில்லை. அலங்காரமாய் என் எதிரில் சும்மா உட்கார்ந்திருக்கும் அவை எந்த விதத்திலும் உன் போல் இல்லை. நீ வந்துதான் செய்யவேண்டுமென்ற காரியங்கள் இங்கு நிறைய ஆகிவிட்டன. மேலும் சின்னங்கள் மூலம் சாமியைப் பார்த்து அலுத்துவிட்டது. நீயே நேரில் வாயேன்!

- அன்புடன் காதலி!
**
இருக்க மரம்

பறக்க வானம்
இனி எப்போதும்
நினைக்க நீ...
வேறென்ன வேண்டும்
இந்தச் சின்ன குருவிக்கு.
**நன்றி: ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன்

1 comments:

Anonymous said...

i'm vignesh. nandrigal pala.en kaathali enakku parisaliththa kavithai putthagaththai tholiththuvittu athae kavithaiyai valaiyil thedi thotru pin kandu kondaen. nandrigal pala nanbanae