Wednesday, April 4, 2007

மற்றும் சில கேள்விகள்...

தொடங்கும் ஒவ்வொன்றும்
முடிதல் திண்ணமெனில்
அண்டம் முடிவுறல்
உண்டா இல்லையா?

குரங்கின் பரிணாமம்
மனிதனை ஈன்றதெனில்
மனிதனின் பரிணாமம்
எதனை ஈனும்?

மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

உலகின் முதல் தாய்க்குப்
பிரசவம் பார்த்தது யார்?

பசைகாயாத பச்சைக்குழவி
மூடிய கண்ணோடு
முலை சப்புகிறதே
கர்ப்பத்துக்குள் புகுந்து
கற்பித்தது யார்?

குருட்டுப் பறவைக்குக்
கூடுகட்டித் தந்தது யார்?

தேகமொரு கூடென்றால்
உள்ளே உயிர்ப் பறவை
வசிக்கின்ற இடமெதுவோ?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனில்
கண்காணும் பிரபஞ்சம்
தாந்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சசோதரா?

பிறப்பில்லா ஒருநாள்
இறப்பில்லா ஒருநாள்
இனி என்று காண்பாயோ சூரியனே?

இருப்புக்கொள்ளாத பூமி
இருளுக்குள் திரும்பிக் கொண்டு
சூரியன் மறைந்தானென்று
சொல்லுதல் சரியாமோ?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

நிலப்பரப்பெல்லாம் குடியிருப்பானால்
கடல் விவசாயம் கண்டறியப்படுமா?

பதினாறே எழுத்துக்கள்
பதினாயிரம் வேர்ச்சொற்கள்
மொழியிற் சரிபாதி
ஒரெழுத்தொரு மொழிகள்
உலகப் பொதுமொழி
உண்டாக்கும் அறஞன்
எந்தக் கருப்பையில்
உண்டாகி வருவானோ?

மொத்த பூமிக்கும்
ஒரே பகல்
ஒரே வசந்தம்
ஒரே மழை
சாத்தியப்படுமா விஞ்ஞானமே?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
மானுடத்தை முன்னெடுத்தோடும்
சக்கரங்களவை
இன்று.... நாளை....
இல்லையெனினும்
ஏதேனுமொரு
யுகமழையில்
முட்டிமுளைக்கும்
விதைகளவை
கேள்விகள் நல்லவை..
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

0 comments: