Wednesday, April 18, 2007

காலமே என்னைக் காப்பாற்று!

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின்
பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில் அணில்
வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின்
அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை
உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும்
பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு
பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும்
தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று
**
ஒரே ஒரு புத்தகம்
படித்த'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று
**
பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -
கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...

நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -
காலமே
என்னைக்
காப்பாற்று
**
எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம்
தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய்
எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று
**
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று
**
தீதும் நன்றும்
பிறர்தர வாரா
என்பது
எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

0 comments: